தஞ்சாவூர் வாடல் நோய் பரவும் விதம் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் தோட்டக்கலைத்துறை விளக்கம்

X
தஞ்சாவூர் வாடல் நோய் எனப்படும் தென்னையைத் தாக்கும் நோய் பரவும் விதம் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பேராவூரணி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வள்ளியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில், சாகுபடி செய்யப்பட்டு வரும் தென்னை மரங்களில் தஞ்சாவூர் வாடல் நோயின் அறிகுறிகள் ஆங்காங்கே தென்படுகிறது. இந்நோயானது கடற்கரையை ஒட்டிய மணற்பாங்கான இடங்கள், பராமரிப்பு இல்லாத தோப்புகள் மற்றும் கோடை காலங்களில் (ஜூலை-நவம்பர்) இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படும். நோயின் அறிகுறிகள் கீழ்கண்டவாறு காணப்படும்: பாதிக்கப்பட்ட மரத்தின் அடிப்பாகத்திலிருந்து 3 அடி உயரம் வரை சாறு வடியும். மரத்தின் ஓலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகும். பின்பு அடிமட்டைகள் எல்லாம் பழுப்படைந்து காய்ந்து மரத்தோடு ஒட்டித் தொங்கும். இதனை இழுத்தால் கையோடு வராது. வேர்களும் அதிகளவில் அழுகி, நிறம் மாறி. எண்ணிக்கையில் குறைந்து காணப்படும். சில நேரங்களில் அனைத்து குரும்பைகளும், இளம் காய்களும் கொட்டிவிடும். மழைக்காலங்களில் மரத்தின் அடிப்பாகத்தில் கேனோடெர்மா பூசணத்தின் வித்துத்திரள்கள் காளான் போன்று காணப்படும். இது தடிமனாகவும், கடினமாகவும் கருஞ்சிவப்பு நிற மேல் பகுதியையும், வெள்ளை கொண்டிருக்கும். அடிப்பகுதியையும். நோய் பரவும் விதம்: கேனோடெர்மா லூசிடம் என்னும் காளான் வகை பூஞ்சாணம் தாக்குவதால் ஏற்படுகிறது. இந்நோய் ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு மண் மற்றும் நீர் மூலமாக பரவுகிறது. இது மண்ணில் நீண்ட காலம் வாழும் தன்மையுடையது. இந்நோயினைக் கட்டுப்படுத்த கீழ்காணும் மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்: நோய் தாக்கி இறந்த மரங்களையும், நோய் முற்றிய நிலையில் உள்ள மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தை சுற்றி வட்டப்பாத்திகள் அமைத்து தனித்தனியே நீர் பாய்ச்ச வேண்டும். (இதற்கு சொட்டுநீர் பாசனம் உகந்தது) கோடையில் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். 1% போர்டோ கலவையை 40 லிட்டர் என்ற அளவில் மரத்தைச் சுற்றி 2 மீட்டர் வட்டப்பாத்தியில் மண் நன்கு நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்ற வேண்டும். 1% போர்டோ கலவை தயாரிக்கும் முறை 200 கிராம் காப்பர் சல்பேட்டை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்திட வேண்டும். 200 கிராம் சுண்ணாம்பினை 20 லிட்டர் தண்ணீரில் கலந்திட வேண்டும். பின்னர் ஒரு பிளாஸ்டிக் டிரம் எடுத்து முதலில் சுண்ணாம்புக் கலவையை ஊற்ற வேண்டும். பின்னர் காப்பர் சல்பேட்டை அதனுடன் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இந்த 40 லிட்டர் கரைசலை மரத்தைச்சுற்றி 2 அடி அகலத்தில் வட்டப்பாத்தி அமைத்து மண் நன்றாக நனையும்படி மரத்தைச்சுற்றி ஊற்றிவிட வேண்டும். பின்னர் ஒரு வாரம் கழித்து ஹேக்சாகோனசோல் இரண்டு மி.லி மருந்தை 100 மிலி (2%) தண்ணீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை வேர்வழியாக கொடுக்க வேண்டும். டிரைகோடெர்மா விரிடி 200 கிராம் 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு இவற்றை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து பாதிக்கப்பட்ட மரத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்தால், பாதிக்கப்பட்ட மரங்களைக் காப்பாற்றி பயன்பெறலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Next Story

