பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு நேரில் சென்று எம்.பி பாராட்டு

X
தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில், நடைபெற்று முடிந்த பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, "பள்ளியைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர்" என்ற திட்டத்தின் கீழ், தஞ்சை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி நேரில் சென்று பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை பாராட்டி, சால்வை, பதக்கம் அணிவித்து, பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டி வருகிறார். அந்த வகையில் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழுகுப்புளிக்காடு, ஆவணம், கரிசவயல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் புதன்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார். தலைமை வகித்த, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி விழாக்களில் கலந்து கொண்டு பள்ளித்தலைமை ஆசிரியர்கள் என்.பாத்திமா விஜயராணி (கழுகுப்புளிக்காடு), மு.கருணாநிதி (ஆவணம்), வீ.திருமுடிச்செல்வன் (கரிசவயல்) மற்றும் இருபால் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்களை பாராட்டி கௌரவித்தார் இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி பேசியதாவது, " கடந்த வாரத்தில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளைச் சேர்ந்த 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன். அதன் தொடர்ச்சியாக நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வெற்றிக்கு காரணமான, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை பாராட்டும் விதமாக, அவர்களை நேரில் சென்று பாராட்டும் வகையில், பள்ளியைத் தேடி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற திட்டத்தின் கீழ், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும், 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகளை தேடிச் சென்று கௌரவித்து வருகின்றேன். இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற 84 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருக்கிறேன்" இவ்வாறு பேசினார். விழாக்களில், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் அலிவலம் அ.மூர்த்தி, இலக்கியா நெப்போலியன், வட்டாரக் கல்வி அலுவலர் க.கலாராணி, முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள், கிராம பிரமுகர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பெட்டிச் செய்தி கருணாநிதியை வாழ்த்திய முரசொலி ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி பேசும்போது, "இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.கருணாநிதி, முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் பெயரை கொண்டு இருக்கிறார். மு. கருணாநிதியை பாராட்டுவதில், கலைஞரின் முதல் பிள்ளையான முரசொலி நாளேட்டின் பெயரைக் கொண்ட, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரான ச.முரசொலி பெருமை கொள்கிறேன்" இவ்வாறு குறிப்பிட்டு பேசியது கூட்டத்தில் பலத்த கரவொலியை எழுப்பியது.
Next Story

