வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரூர் மாவட்டம் தாந்தோணி வட்டம் வெள்ளியணை கிராமம் வெங்கடாபுரத்தில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் ஜூன் மாதம் 5ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி முனைவர் திரவியம் அனைவரையும் வரவேற்று வேளாண் வளர்ச்சி இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து தேசிய வாழை ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி முனைவர் பிரபு மண்வளத்தின் முக்கியத்துவம், தீவனப் பயிர்கள் சாகுபடி மற்றும் கால்நடைகளுக்கான சமச்சீர் உணவு முறை குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை முனைவர் பாலசுப்பிரமணியன் தலைமையேற்று சுற்றுச்சூழல் குறித்து சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவானந்தம் கலந்துகொண்டு சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் மற்றும் விவசாயிகளுக்கான மானியத் திட்டங்கள் குறித்து விளக்கினார். உதவி பொது மேலாளர்பிரபாகரன் தனது சிறப்புரையில் நபார்டு வங்கி மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். தோட்டக்கலைத் துறையின் உதவி தோட்டக்கலை அலுவலர் இளவரசி தோட்டக்கலைத் துறையின் நுண்ணீர் பாசன திட்டம் குறித்து விளக்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விவசாயிகளுக்கு மண்வளம் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாந்தோணி வட்ட வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்திபன் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முனைவர் கோபி மற்றும் முனைவர் கார்த்திகேயன், உதவி விதை அலுவலர் சிவசாமி, தோட்டக்கலை உதவி அலுவலர் பாலசுப்ரமணியன் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சார்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் பங்கேற்று பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியை நமது வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் கவியரசு மற்றும் உதவியாளர் பூபதி சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
Next Story





