திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம்
நாகை மாவட்டம் திருக்குவளையில், சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வைகாசி திருவிழா கடந்த மே மாதம் 23 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்பாளுடன் தேரில் தியாகராஜ ஸ்வாமி எழுந்தருள மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், திரளான பக்தர்கள் ஆரூரா, தியாகராஜா என முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. மேலும், அழிந்து வரும் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் வகையில் தப்பாட்டம், கோலாட்டம், நடன நிகழ்ச்சி நடைபெற்றது. சிவவாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டத்தில், திருக்குவளை மட்டுமின்றி நாகை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்திற்கான உபய ஏற்பாடுகளை, நாட்டிருப்பு கிராம குத்தகைதாரர்கள் செய்திருந்தனர்.
Next Story




