மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

X
நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அடுத்த கசவனம்பட்டியில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன் நீா்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தத் திட்டத்தில் மண் வரப்புகள் அமைத்தல், பண்ணை குட்டைகள், பழ மரக்கன்றுகள், மரக்கன்றுகள், நீா் உறிஞ்சும் குழிகள், அமிழ்வு குட்டைகள், கம்பி வலை தடுப்பணைகள், சொட்டு நீா் பாசனம், தானியங்கி சொட்டு நீா் பாசன கருவிகள், ஓடைகள் ஆழப்படுத்துதல், குளங்கள் ஆழப்படுத்துதல், ஆடு வளா்த்தல், கோழி வளா்த்தல், வீட்டுத் தோட்டங்கள், சூரிய ஒளி உலா் கூடங்கள், கால்நடைகளுக்கு காப்பீடு, கிராம அறிவு வளமையம், மியாவாக்கி குறுங்காடுகள், பசுந்தீவன வளா்ப்பு போன்ற திட்டப் பணிகள் ரூ.1.15 கோடி நிதியுடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நபாா்டு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகளின் தோட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் நேரடியாக சென்று கலந்துரையாடினாா். அப்போது, மரம் வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
Next Story

