குடிநீர் வரும் பாதையில் மின்சார மோட்டாரை வைத்து குடிநீரை உறிஞ்சுபவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க கோரிக்கை

மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சும் நபர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர், பாலையூர் ஊராட்சி நிர்வாகம் ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது நாகை ஒன்றியம் பாலையூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கிடைக்காமல், பல ஆண்டுகளாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சிலர் குடிநீர் வரும் பாதையில் மின்சார மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சி விடுவதால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போய் விடுகிறது. இதுகுறித்து பல முறை புகார் செய்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தபால் அலுவலக தெருவில், மாடு மற்றும் ஆட்டுப்பண்ணை வைத்து மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி எடுத்து வருகிறார்கள். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்தோம். புகாரின்பேரில், வீட்டு குடிநீர் இணைப்பை வாசலில் வைத்தார்கள். தங்களுடைய பணபலத்தால், உள்ளாட்சி பிரதிநிதிகளின் துணையுடன், வீட்டு வாசலில் இருந்த குடிநீர் இணைப்பை வீட்டிற்குள் கொண்டு சென்று விடுகிறார்கள். இதனால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள்தான் அவதிக்குள்ளாகிறார்கள். மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சும் நபர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய ஆய்வு நடத்தி, மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுபவர்களின் குடிநீர் இணைப்பை துண்டித்தால் தான், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story