துரித உணவுகளால் உடல் நலம் பாதிக்கும் : உணவு பாதுகாப்பு அலுவலர்

X
நம் நாட்டில் அதிகரித்து வரும் துரித உணவுகளால் உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது என உணவு பாதுகாப்பு துறை தஞ்சாவூர் நியமன அலுவலர் பா. விஜயலலிதாம்பிகை தெரிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு நாளையொட்டி, தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா வளாகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, தஞ்சை மாவட்ட வணிகர் சங்கக் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: உணவும், குடிநீரும் தரமாக இல்லாவிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும். உணவுப் பொருட்களில் குழந்தைகளை ஈர்ப்பதற்காக நிறங்களைச் சேர்க்கின்றனர். இதைச் சாப்பிடுவதால் உடல் நிச்சயமாக பாதிக்கப்படும். எனவே, உணவு பொருட்களில் நிறங்களைக் கண்டிப்பாகக் கலக்கக் கூடாது. ஒரு முறை உபயோகம் செய்யப்பட்ட எண்ணெய்யைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தினால் வயிற்றில் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். செய்தித்தாளில் உணவுப்பொருட்களை வைத்துக் கட்டக் கூடாது. இதேபோல, சூடான உணவுப்பொருட்களை நெகிழிப் பைகளில் வைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், உடல் பாதிப்பு ஏற்படும். எனவே, நெகிழிப் பைகள், டப்பாக்களில் உணவை வாங்குவதற்கு பதிலாக பொதுமக்களே பாத்திரங்களைக் கொண்டு சென்று வாங்க வேண்டும். துரித உணவுகளால் பாதிப்பு ஏற்படும் என்பதால், வெளிநாட்டினர் அப்பழக்கத்திலிருந்து விடுபட்டு வருகின்றனர். ஆனால், நம் நாட்டில் துரித உணவை உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பானி பூரி போன்ற உணவுகளை மாதத்துக்கு ஒரு முறை எடுத்துக் கொண்டால், எந்தவித பிரச்னையும் ஏற்படாது. அதையே நாள்தோறும் சாப்பிட்டால், உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனவே, துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும், நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் அதிகமாக வருவதற்கு உணவுப் பழக்கம் மாறிவிட்டதே காரணம். எனவே, நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய உணவு பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார் விஜயலலிதாம்பிகை. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ராஜா சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எச்.அப்துல் நசீர், பொருளாளர் டி.ராஜா, நகரத் தலைவர் பி.சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

