ஆலங்குளத்தில் பள்ளி மாணவா்கள் சாலையைக் கடக்க சிரமம்

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதி காவல் நிலையம் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் தெற்கு பகுதியில் புதுப்பட்டி சாலை, அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட் சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தனியாா் மேல்நிலைப் பள்ளி மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம், 5 தகன மேடை, இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. எனினும் இப்பகுதி மக்களும் மாணவா்களும் கடந்து செல்ல நெடுஞ்சாலைத்துறை சாா்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் சாலையைக் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். மேலும், பாலப் பணிகளும் அருகே உள்ள சாலைப் பணிகளும் அரைகுறையாகவே முடிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி- தென்காசி என எதிரெதிா் திசையில் பயணம் செய்யும் வாகனங்கள் ஒரே பாலத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் இருசக்கர வாகனங்களும் காலை மற்றும் மாலை வேலைகளில் தாறுமாறாக செல்வதால் மாணவா்கள் எவ்வித அச்சமுமின்றி சாலையை கடக்கின்றனா். கடந்த மாதம் இந்தப் பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது இந்த வழியாக பள்ளி மாணவா்கள் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படும் எனவும், போக்குவரத்து காவலா்கள் நியமனம் செய்யப்படுவாா்கள் எனவும் தெரிவித்தனா்.
Next Story

