குழந்தைகளின் கல்வி நிதி மறுப்புக்குக் கண்டனம்- மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் !

X
மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறி, அமித்ஷா தமிழகத்திலிருந்து திரும்பிச் செல்ல வலியுறுத்தி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது கல்வி உரிமைச் சட்டத்தின் நகல்கள் கிழித்து எறியப்பட்டன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது, மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பிரச்சினைகள் காரணமாக தமிழகக் குழந்தைகளின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோல 3 லட்சம் குழந்தைகள் பள்ளியில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மொத்தமாக 5 லட்சம் குழந்தைகள் கல்வியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குழந்தைகளின் கல்விக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அமித்ஷா உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினோம். இனி வரும் காலங்களில் மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்தால், அதை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளின் பிரச்சினைகளால் குழந்தைகளின் கல்வி பாதிப்படைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்தார்.
Next Story

