காவேரிப்பாக்கம்: தடுப்பு சுவற்றில் மோதி கார் கவிந்து விபத்து

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 36). இவர் நேற்று தனக்கு சொந்தமான காரில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், காஞ்சீபுரம் பகுதியில் உள்ள உறவினரின் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். இதற்காக நேற்று மாலை காஞ்சீபுரம் பகுதியில் இருந்து வேலூர் நோக்கி, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். காரை மோகன் ஓட்டினார். ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கம் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்து சேதம் அடைந்தது. காரில் பயணம் செய்த மோகன், தினேஷ் (36), மதுஷாலினி (11), கனிஷ்கா (7), மீனாட்சி (37), சித்திக்குமார் (3), ஜனனி (18), திஷிகா (13), சக்திவேல் (45) உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

