அறுவை சிகிச்சைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய முதியவர் சடலமாக மீட்பு
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து திருமுருகன்பூண்டி நகராட்சி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (79). இவர் தனது மகன் தனசேகருடன் வசித்து வருகிறார். மோகனசுந்தரத்திற்கு சில நாட்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பயந்த முதியவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததை அடுத்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், இன்று அவிநாசியை அடுத்து அம்மாபாளையம் ராசாத்தம்மன் கோவில் எதிரே உள்ள குளத்தில் முதியவர் ஒருவர் சடலமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார், உடலை கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில்,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய முதியவரின் சடலம் என தெரியவந்தது.இதையடுத்து, முதியவர் அறுவை சிகிச்சைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story



