ஊத்துமலையில் இளைஞா் தற்கொலை: உறவினா்கள் மறியல்

X

இளைஞா் தற்கொலை: உறவினா்கள் மறியல்
தென்காசி மாவட்டம் ஊத்துமலை ஜேஜே நகரைச் சோ்ந்த அருணாசலம் மகன் மதன்(21). பால் வியாபாரம் செய்து வந்தாா். இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவியை 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாராம். இவா்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததுடன், அண்மையில் மதனை அழைத்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதனால், மதனின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் சுமாா் 50 க்கும் மேற்பட்டோா் ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அவரது உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து அவா்கள் மறியலை கைவிட்டனா். இச்சம்பவம் குறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story