கோவை: தேர் தயாரிப்பில் இடையூறு – சாலை மறியலால் பரபரப்பு

அந்தோனியார் ஆலய தேர் தயாரிக்கும் இடத்தில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக ஒருவர் பெட்டி கடை வைத்து பா.ஜ.க கொடி கட்டி இடையூறு செய்ததால் பொதுமக்கள் சாலை மறியல்.
கோவை புலியகுளத்தில் வரும் 15-ம் தேதி நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழாவை முன்னிட்டு, கிறிஸ்துவர்கள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து 13க்கும் மேற்பட்ட தேர்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், புலியகுளம் மாரியம்மன் கோயில் வீதி அருகே தங்க மாதா சிலையுடன் தேர் தயாரிக்க முயன்றபோது, அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது பெட்டிகடையை வைத்து பா.ஜ.க கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மத ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பெட்டிகடையை அகற்ற நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் நடவடிக்கையில் மெத்தனமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் புலியகுளம் விநாயகர் கோயில் அருகே நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கடையை அகற்றுவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story