தீ குளித்தவர் உயிரிழப்பு, உறவினர்கள் சாலை மறியல்

அரசு மருத்துவமனை முன்பு காவல்துறையினரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (52) இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அதில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை என்பதால் தனது நண்பர் செல்வராஜ் என்பவரிடம் தனது நிலத்தின் பத்திரத்தை வைத்து பணம் கேட்டு உள்ளார். பத்திரத்தை பெற்றுக்கொண்ட நண்பர் செல்வராஜ் 10 லட்சத்திற்கு பத்திரத்தை அடமானம் வைத்து அதில் மூன்று லட்சம் மட்டும் ஜெயராமனிடம் கொடுத்துவிட்டு மீதி 7 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஜெயராமன் புகார் அளித்துள்ளார். அதியமான் கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து செல்வராஜ் இடம் இருந்து ஒரு பத்திரத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள மற்றொரு பத்திரத்தை கொடுக்காமலும் பெற்ற பணத்தை கொடுக்காமலும் இழுத்தடித்து வந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் இது குறித்து ஜெயராமன் கடந்த 4 தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து மேலே ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத காவல்துறையினர் தீயை அணைத்த பின்னர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயராமனுக்கு 60% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த ஜெயராமனின் உயிரிழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் உரிய விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நிலத்தின் பத்திரத்தை மீட்டு தர வேண்டும் என உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் இறந்து போன ஜெயராமின் உறவினர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story