ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு உயர் முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.-நாமக்கல்லில் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

X

மலைவாழ் மக்களுக்கான பல்வேறு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. கல்வி சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் பழங்குடியின மாணவ-மாணவிகள் ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு உயர் முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருவதால், மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது என்றும், குறை கூற முடியாத அளவிற்கு பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருவதால் எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்றும் அத்துறைக்கான அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் நாமக்கல்லில் (10.06.2025) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.நாமக்கல் மாநகராட்சி, வார்டு எண் 2, முதலைப்பட்டி பகுதியில் மாநிலங்களுக்கான சிறப்பு உதவி திட்டம் 2023-24ன்கீழ், முதலைப்பட்டி பொது நூலக கட்டடம், 22 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா (10.6.25) நடைபெற்றது.இந்த நூலக கட்டடத்தை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. மதிவேந்தன்தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கான விடுதிகள் தொடர்ச்சியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மலைவாழ் மக்களுக்கான பல்வேறு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. கல்வி சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் பழங்குடியின மாணவ-மாணவிகள் ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பழங்குடியின, ஆதிதிராவிடர் மாணவ மாணவிகள் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்து வருகிறது. உண்டு உறைவிட பள்ளி உள்ளிட்ட பள்ளி கட்டடங்கள், விடுதிகள் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. அரசு, இத்துறைக்கு கூடுதல் மற்றும் சிறப்பு நிதி ஒதுக்கி உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், கல்வி சார்ந்த பயிற்சிகள் ஆகியவற்றை மேம்படுத்தி வருகின்றது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.3 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுலா பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வனத்துறை சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுலாப் பயணிகள் வான் காட்சிகளை இரசிக்கும் வான் பூங்கா மையம் (Dark Sky Park) அமைப்பதற்கான அறிவிப்பு அரசு துறையால் வெளியிடப்பட்டுள்ளதால், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். தமிழகத்தில் கொலை, கொள்ளை குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா. மதிவேந்தன்,மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக விசாரணை துரிதப்படுத்தி தவறு செய்தவர்கள்மீது காவல்துறை மூலம் சிறப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குறை கூறுகிறார்கள். மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு துறையிலும் கூடுதல் நிதி ஒதுக்கி அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.திமுக ஆட்சியில் மட்டுமே இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாக விமர்சனம் அவதூறு செய்கின்றனர்.குறை கூற முடியாத அளவிற்கு பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருவதால் ஒவ்வொரு உள்ளாட்சி, பாராளுமன்ற, இடைத்தேர்தல் ஆகிய தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று வருகிறது. திமுக ஆட்சி மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காக இந்த அரசின்மீது வேண்டும் என்று அவதூறு பரப்பி, பொய்ப் பிரச்சாரங்களை கூறி மக்களை குழப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தோல்வியடையும். வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெறும் என்றும் நாமக்கல்லில் அமைச்சர் மா. மதிவேந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி,மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி, மைய நூலக முதல் நிலை நூலகர் இரா. சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story