உத்தமசோழபுரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் கதவணை கட்டப்படுவதை கண்டித்து

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், நாகூர் அடுத்த உத்தமசோழபுரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுவரும் கதவணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கண்டித்து பேசினார். ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததால், வெயிலின் கொடுமையால் பெண்கள் மயக்கமடையும் நிலை ஏற்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மர நிழலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பேரழிவை அரசுக்கு எடுத்துரைத்து கதவனை பணியை பூதங்குடிக்கு மாற்றம் செய்ய உதவ வேண்டும் என வலியுறுத்தினர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர், விவசாயிகளை சந்திக்க மறுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கொல்லைப்புற வழியாக காரை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக முழக்கமிட்டனர் பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக விவசாயிகளை சந்தித்து சமாதானப்படுத்தி தங்கள் கோரிக்கையை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்தார் இதனை ஏற்றுக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். பின்னர் செய்தியார்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது காவிரி டெல்டா மாவட்டங்களில் கடல் மட்டம் உயர்ந்ததால், கடலில் கலக்கும் ஆறுகள் வழியே கடல் நீர் உட்புகுந்து 40 கிலோ மீட்டர் வரையிலும் குடியிருப்பு மற்றும் நிலப்பகுதிகளுக்குள் நுழைந்து ஒட்டுமொத்த நிலப்பகுதியும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது. இந்நிலையில், நாகை அருகே நாகூர் கடற்கரையில் இருந்து ஏழரை கிலோ மீட்டர் தூரத்தில், உத்தமசோழபுரத்தில் நீர் பாசன துறை மூலம் ரூ.50 கோடி செலவில் கதவணை அமைக்கும் பணி தொடங்கியுள்ளனர். இப்பணி முடிவடைந்தால் ஏழரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உட்புகுந்து இரு கரையோரமும் உள்ள 32 கிராமங்களில் நிலத்தடி நீர் பறிபோகும். சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும். ஒட்டுமொத்தமாக திமுக மாவட்ட செயலாளர் கவுதமனின் ஆதரவு பெற்ற இறால் பண்ணையாளர்களின் நலனுக்காக கடல் நீரை உள்ளே கொண்டு வந்து பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, விவசாயிகள் நலன்கருதி கடல் முகத்துவாரத்தில் அதிமுக அரசு ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளை பின்பற்றி, கடல் நீர் உட்புவதை தடுக்கும் வகையில், பூதங்குடி அருகே கதவணையை மாற்றி அமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி 32 கிராம மக்கள் அனைத்து கட்சியை சார்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை சந்தித்து கோரிக்கையை ஏற்று அரசுக்கு அனுப்பி தீர்வு காண்பதற்கு மறுத்து விட்டார். விவசாயிகளை சந்திக்க மறுத்த அவமதித்து கொல்லைப்புற வழியாக வெளியேறி விட்டார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில், ஒட்டுமொத்த மக்களையும் போராட்டக் களத்திற்கு மாவட்ட ஆட்சியர் தள்ளி உள்ளார். கடல் நீரை உட்புகுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டாவில் பல கிராமங்கள் அழிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உயர் மட்ட குழுவை அனுப்பி உத்தமசோழபுரம் கதவணை குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். பூதங்குடி அருகே கதவணையை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பூதங்குடியில் மண் வகைப்பாடு சரியில்லை என்று சொல்லி வருவது உண்மைக்கு புறம்பானது. பொதுமக்கள் குறிப்பிடும் பூதங்குடி அருகே மூன்று உயர்மட்ட பாலங்களும், ஈசிஆர், விழுப்புரம் - தூத்துக்குடி போன்ற உயர்மட்ட சாலைகளும் செல்லுகிறது. இந்நிலையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் அரசுக்கு தெரிவித்து வருகிறார். எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உண்மையை அரசுக்கு எடுத்துரைத்து அமைதியை ஏற்படுத்த வேண்டிய மாவட்ட ஆட்சியர் சுயநலத்திற்காக ஒப்பந்தக்காரருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மக்களையும் புறக்கணித்து அவமதித்துள்ளார். எனவே, அரசுக்கும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பிரிவினையை உருவாக்கும் வகையில் செயல்படும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷிற்கு எதிராக, நாகை மாவட்டத்தில் எந்த கிராமத்திற்கு சென்றாலும் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என எச்சரிக்கிறேன். தமிழக முதலமைச்சர் நேரில் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர் | நாகை மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் கமல்ராமன், துணை செயலாளர் சேகர், திருமருகல் ஒன்றிய செயலாளர் பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story