கடவூர் தாசில்தாரை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் தாலுகாவில் சட்டவிரோதமாக நீர் நிலைகளை ஆக்கிரமித்து அரசு அனுமதி இன்றி 10 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கனிமங்களை வெப்படை செல்வராஜ் அதிகாரிகள் ஆதரவுடன் கடத்தி வருவதை தடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக புகார்கள் அளித்து வருகின்றனர். கடவூரில் கனிமங்கள் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிற 16-ஆம் தேதி கரூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி கருப்பு சட்டை பேரணி நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் வரவணை வெப்படை செல்வராஜ் கல்குவாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் கேட்டபோது தாசில்தார் சௌந்தரவல்லி பொதுமக்கள் பிரதிநிதிகளை நோக்கி கை நீட்டி ஆவேசமாக நீங்கள் வெளியே கிளம்புங்கள் . கதவை இழுத்து பூட்டுங்கள், உங்களது மொபைல் போன்களை இங்கே கொடுங்கள் , போலீசை உடனே வர சொல்லுங்க என மிரட்டும் தோனியில் உச்சத்தில் பேசினார். கடவூர் தாசில்தாரை கண்டித்து அவரது அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்க தலைவர் நாகராஜ் , மாநில பொருளாளர் பழனிச்சாமி , மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ் , பா.ம.க ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, தமிழர் தேசம் கட்சி மாவட்ட இணை செயலாளர் சீரங்கன், இளைஞர் அணி பூமிநாதன், ஒன்றிய செயலாளர் மோகன் உட்பட பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ , டி.எஸ்.பி செந்தில்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தொலைபேசியில் பேசினர். கனிமங்கள் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 16-ஆம் தேதி திட்டமிட்டபடி கருப்பு சட்டை பேரணி நடைபெறும் என தெரிவித்துவிட்டு காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
Next Story