கோவை: பயங்கர தீ விபத்து: வீடு எரிந்து நாசம்

கோவை நீலிக்கோணாம்பாளையம், சிங்காநல்லூரைச் சேர்ந்த மாணிக்கராஜ் என்பவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீடு முழுவதும் எரிந்து நாசமானது.
கோவை நீலிக்கோணாம்பாளையம், சிங்காநல்லூரைச் சேர்ந்த மாணிக்கராஜ் என்பவரது வீட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், வீடு முழுவதும் எரிந்து நாசமானது. மாணிக்கராஜ் கோவை விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம், மாணிக்கராஜ் தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் இரண்டாம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததால், தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து பீளமேடு தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், வீட்டின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த தளவாட சாமான்கள், மின்சாதனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story