கோவை: நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகள் ஆய்வு !

கோவை: நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகள் ஆய்வு !
X
கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார்.
கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த நூலகம் 245 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம், 50 கோடியில் புத்தகங்கள், 5 கோடி ரூபாயில் கணினி உள்ளிட்ட வசதிகள் என மொத்தம் 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுவதாகத் தெரிவித்தார். பணிகள் டிசம்பர் மாத இறுதியில் முடிந்து, ஜனவரி மாதம் முதலமைச்சரால் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நூலகத்தில் 305 இருக்கைகள் கொண்ட உள் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்குத் தனிப் பிரிவு, தமிழ் மற்றும் ஆங்கில நூல்களுக்குத் தனிப் பிரிவுகள், டிஜிட்டல் நூலகம், அறிவியல் மையம் போன்ற பல்வேறு நவீன வசதிகள் அமையும் என்றும் அமைச்சர் கூறினார். பிற திட்டப் பணிகள் மேற்கு புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதாகவும், டெண்டர் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நில எடுப்பு பணிகள் மூன்றாம் கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். கோல்டு வின்ஸ் - உப்பிலிபாளையம் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதன் கீழ் நடைபாதை மற்றும் 1.5 மீட்டர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். சிங்காநல்லூர் மேம்பாலம் மத்திய அரசின் கீழ் வருவதாகவும், அதற்கான புதிய வரையறை செய்யப்பட்டு அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோவை-திருச்சி சாலை விரிவாக்க பணிகள் குறித்துப் பேசிய அவர், ₹3500 கோடி மதிப்பிலான பசுமைவழிச்சாலை திட்டத்தை, பேச்சுவார்த்தைக்குப் பிறகு ₹380 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப் பாதையாக மாற்றி, நெடுஞ்சாலைத்துறை அத்திட்டத்தை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார். தனிப்பட்ட நிகழ்வு குறித்து விளக்கம் திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்வு ஒன்றில் தான் கலந்துகொண்டது குறித்த கேள்விக்கு, தான் பொதுவாக கட்சி வேறுபாடு பார்ப்பதில்லை என்றும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தன்னை மதித்து அழைப்பிதழ் கொடுத்ததால் அந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, கோல்டு வின்ஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
Next Story