சமையல் எண்ணெய் இறக்குமதியால் தமிழக விவசாயிகள் பாதிப்பு - உழவர் உழைப்பாளர் கட்சி கண்டனம் !

சமையல் எண்ணெய் இறக்குமதியால் தமிழக விவசாயிகள் பாதிப்பு - உழவர் உழைப்பாளர் கட்சி கண்டனம் !
X
சமையல் எண்ணெய் இறக்குமதி காரணமாக தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக தென்னை விவசாயிகளுக்கு தேங்காய் கொப்பரை விலையில் நிலையற்ற தன்மை நீடிப்பதையும் உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து சுட்டிக்காட்டியுள்ளார்.
சமையல் எண்ணெய் இறக்குமதி காரணமாக தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக தென்னை விவசாயிகளுக்கு தேங்காய் கொப்பரை விலையில் நிலையற்ற தன்மை நீடிப்பதையும் உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலை நீடித்தால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். செல்லமுத்து பேசுகையில், தேங்காய் கொப்பரையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கொப்பரையின் விலை ஒரு வாரம் உயர்ந்து, அடுத்த வாரம் குறைகிறது. காலம் காலமாக தென்னை விவசாயிகளுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், சமையல் எண்ணெய் இறக்குமதிதான் என்றார். கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், கொட்டை முத்து எண்ணெய் போன்ற எண்ணெய் பயிர்களை உற்பத்தி செய்யும் கோடிக்கணக்கான விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ரூ.35-க்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கு, குறிப்பாக பாமாயிலுக்கு, அளவில்லாத மானியம் அளித்து மக்கள் உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினால், மேலே குறிப்பிட்ட எண்ணெய் பயிர் விவசாயிகள் மற்றும் தேங்காய் உற்பத்தியாளர்கள் அனைவரும் நஷ்டம் இல்லாமல் லாபம் அடைய முடியும் என்று செல்லமுத்து தெரிவித்தார். மாற்றாக, இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கு இறக்குமதி வரியை அதிகரித்து, ஏற்றுமதி விலைக்கு நிகராக கொண்டு வர வேண்டும் என்றும், அது ஒரே சீரான விலை கிடைக்க வழிவகை செய்யும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அரசாங்கம் விவசாய சங்கத் தலைவர்களுடன் கலந்து பேசி, விவசாயிகளுக்கு கட்டுபடியாகக்கூடிய விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், விலை நஷ்டப்படும் காலத்தில் அரசாங்கம் அதை ஈடு செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரினார். எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி, விவசாயிகளுக்கு கட்டுபடியாகக்கூடிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு அளித்திருந்தது. ஆனால், இன்று ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் கூட அது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த அரசாங்கம் விவசாயிகளை மாற்றான் தாய் பிள்ளைகளாக நினைக்கிறது. பணம் கொட்டுகிற கனிம வளம் மற்றும் மற்ற துறைகளைப் போல விவசாயிகளை அரசாங்கம் கவனிக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால், அரசாங்கத்தின் முழு கவனம் விவசாயிகள் பக்கம் திரும்ப வேண்டும் என்று செல்லமுத்து தெரிவித்தார். விவசாயிகள் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருவதால், எதிர்காலத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும், இதுகுறித்து அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் செல்லமுத்து தனது பேச்சில் குறிப்பிட்டார்.
Next Story