மேலூர் பகுதியில் சாம்பல் நிற தேவாங்கு. நிபுணர்கள் ஆய்வு.

X

மதுரை மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேவாங்குகளை குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அழகர்மலை அடிவாரமான கேசம்பட்டி, கம்பூர், சேக்கிபட்டி ஊராட்சிகளில் காணப்படும் சாம்பல் நிற தேவாங்குகள் குறித்தும் அவைகள் எதிர்கொள்ளும் வாழ்விட சவால்கள் குறித்தும் அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த முதுகலை விலங்கியல் மாணவர் திரு. ஆ. ஜஸ்வின் மேஷாக் ஸ்மைல் அவர்கள் நான்கு மாதம் கள-ஆய்வை மேற்கொண்டார். மதுரை மாவட்டத்தில் தேவாங்குகளின் பரவல், அவைகளின் வெவ்வேறு வாழ்விட நடவடிக்கை மற்றும் தேவாங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்துதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு, விலங்கியல்துறை இணை பேராசிரியர் திரு. ராஜேஷ் அவர்கள் வழிகாட்டுதலில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு குறித்து திரு. ஜஸ்வின் அவர்கள் கூறியதாவது: தேவாங்கு (Lorisidae) குடும்பத்தில் சாம்பல் நிற தேவாங்கு (Loris lydekkerianus) மற்றும் வங்காள தேவாங்கு (Nycticebus bengalensis) என இரு சிற்றினங்கள் இந்தியாவில் காணப்படுகிறது. அதில் சாம்பல் நிற தேவாங்கு உலகில் இலங்கை மற்றும் தென்னிந்திய பகுதியில் மட்டுமே காணப்படுகிற அரிய உயிரினமாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) சாம்பல் நிற தேவாங்கை அச்சுறுத்தலை (NT) சந்திக்கும் விலங்கென ஆய்வறிந்து சிகப்பு பட்டியலில் இணைத்துள்ளது. மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரமான கேசம்பட்டி, கம்பூர், சேக்கிபட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை சாம்பல் நிற தேவாங்குகள் (Loris lydekkerianus lydekkerianus) குறித்து ஆய்வு செய்ய தேர்ந்தெடுத்தேன். இப்பகுதிகளில் காணப்படும் கோயில்காடுகள், நீர்நிலை கரையோர காடுகள், மலைக்குன்றுகள், வேளாண் பகுதிகள் என பல பகுதியில் ஆய்வை மேற்கொண்டேன். இந்த ஆய்வு கடந்த டிசம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரை என மொத்தம் நான்கு மாதங்கள் நடைபெற்றது. ஆய்வின் போது எண்ணிக்கையின் அடிப்படையில் மொத்தமாக 194 சாம்பல் நிற தேவாங்குகளை பதிவு செய்தேன். கேசம்பட்டி கிராமத்தில் அதிகபட்சமாக 111 தேவாங்குகள் காணப்பட்டன. மற்ற இரு ஊராட்சிகளான கம்பூர் மற்றும் சேக்கிபட்டியில் முறையே 55 மற்றும் 28 தேவாங்குகள் பதிவாகியிருந்தன. ஆய்வு மேற்கொண்ட காலத்தில் அதிக எண்ணிக்கையிலான தேவாங்குகள் (91) டிசம்பர் மாதத்திலும், குறைந்த எண்ணிக்கையிலான தேவாங்குகள் (17) மார்ச் மாதத்திலும் பதிவானது. மார்ச் மாதத்தில் தேவாங்குகள் குறைவாகக் காணப்படுவதற்கான ஒரு காரணமாக, மாம்பழ தோட்டங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருக்கக்கூடும். இது அவற்றின் இயல்பான நடத்தை மற்றும் வாழிடப் பயன்பாட்டை பாதிக்கக்கூடியதாக இருக்கலாம். மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகள் தேவாங்குகளுக்கு வளர்ந்துவரும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சாலைகள் விரிவடைவதால் அவற்றின் வாழ்விடம் துண்டிக்கப்படுகிறது. மரங்களில் வாழும் இவை சாலைகளை கடக்க வேண்டிய சூழ்நிலையில் பலி ஆகும் வாய்ப்பு அதிகம், மேலும் பல மரணங்கள் இப்பகுதியில் பதிவாகியுள்ளன. தேவாங்குகள் சாலை விபத்தில் பலியாவதை தடுக்க, சாலையின் இருபக்கம் உள்ள மரங்களை இணைக்கும் ஏணிவடிவிலான பாலம் அமைக்கலாம். சாலை அருகே தேவாங்குகள் சாலையை கடக்கும் பகுதி என்கிற வகையிலான எச்சரிக்கை பலகை, சின்னங்கள் தேவாங்குகள் சாலையை கடக்கும் முக்கியமான இடங்களில் சாலையின் இருபக்கமும் அமைக்கப்பட வேண்டும். தேவாங்குகள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் கண்டறிந்து அதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அல்லது பல்லுயிரிய மண்டலமாக அறிவித்து பாதுகாக்கலாம் என்று ஆய்வில் குறிப்பிட்டுள்ளதாக ஜஸ்வின் தெரிவித்தார்.
Next Story