நெல்லை - கத்ரா விரைவு இரயிலை நாமக்கல் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்! மத்திய இணை அமைச்சர் முருகன் தகவல்

நாமக்கல் ரயில் நிலையத்தில் சரக்கு லாரிகள் நிறுத்துமிடம், சரக்கு அறைகள் மேம்பாடு ஆகிய பணிகள் குறித்து, ரயில்வே துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, அப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
வாரம் ஒரு முறை இயக்கப்படும் நெல்லை - கத்ரா விரைவு இரயிலை, நாமக்கல் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாமக்கல் இரயில் நிலையத்தில் சரக்கு அறை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த இரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அம்ருத் பாரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மத்திய தகவல் - ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் தகவல்.மத்திய தகவல் - ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல். முருகன் நாமக்கல் இரயில் நிலையத்தில் கள ஆய்வுகளை புதன்கிழமை மாலை மேற்கொண்டார். அப்போது இந்த இரயில் நிலையத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்ருத் பாரத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ரயில்வே துறை அலுவலர்களுடன் இணைந்து அமைச்சர் முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இத்திட்டத்தின்கீழ், நாமக்கல் இரயில் நிலையத்தில் முகப்பு சீரமைப்பு, 2, 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மின் தூக்கி, நடை மேம்பாலம், நவீன பயணிகள் ஓய்வு அறை, நவீன கழிப்பறை, இரயில்வே பாதுகாப்பு படை அறை, பொருள்கள் வைப்பறை விருந்தினர் அறை உள்ளிட்ட பல்வேறு கட்டுமான மற்றும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு மத்திய இணை அமைச்சர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் இரயில் நிலையத்தில், அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 14.50 கோடி மதிப்பீட்டில் இரயில்வே நிலைய மேம்பாட்டு பணிகள் மற்றும் ரூ. 5.50 கோடி மதிப்பீட்டில் கூட்செட் விரிவாக்க பணிகள் என மொத்தம் 20 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகின்றன. அப்போது நாமக்கல் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஈரோடு வழியாக புதுதில்லி செல்வதற்கு பல்வேறு ரயில்கள் உள்ளதால், வாரம் ஒரு முறை திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் நெல்லை - கத்ரா விரைவு இரயிலை, நாமக்கல் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், நாமக்கல் ரயில் நிலையத்தில் சரக்கு லாரிகள் நிறுத்துமிடம், சரக்கு அறைகள் மேம்பாடு ஆகிய பணிகள் குறித்து, ரயில்வே துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, அப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நாமக்கல் ரயில் நிலையம் பொதுப்பொலிவோடு திகழும் என்றும், ரயில் உபயோகிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் முருகன் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் சரவணன், இராஜேஷ்குமார், சேலம் இரயில்வே கோட்ட துணை மேலாளர் சிவலிங்கம், முதுநிலை திட்ட மேலாளர் கங்காராஜு, இதர இரயில்வே துறை அதிகாரிகள், நாமக்கல் மாவட்ட இரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி, செயலாளர் கார்த்திக் சென்னிமலை உள்ளிட்டோர், கூட்ஸ் செட் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story