முதல்வர் ஸ்டாலினின் புதிய ‘கோரிக்கை மனு’ நாடகம் அரங்கேற்றம்” - இபிஎஸ் குற்றச்சாட்டு

முதல்வர் ஸ்டாலினின் புதிய ‘கோரிக்கை மனு’ நாடகம் அரங்கேற்றம்” - இபிஎஸ் குற்றச்சாட்டு
X
மக்களிடம் மனு வாங்கி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுதான் ஓர் ஆட்சியின் கடமை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவதும், அம்மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றுவதும் நடைமுறை. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர், மாவட்டங்களில் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை சென்னைக்குக் கொண்டுவந்து முதலமைச்சரின் தனிப் பிரிவில் அம்மனுக்கள் பிரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். 1991-96 ஆட்சியின்போது ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவை கணினிமயமாக்கியதுடன், அவரே நேரில் ஆய்வு செய்து இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை தனி அலுவலராக நியமித்து, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களைய நடவடிக்கை மேற்கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2012-ம் ஆண்டு ‘அம்மா திட்டம்’ என்ற ஒன்றை அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட அதிகாரிகள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் ஊராட்சிகளுக்குச் சென்று முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு-இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள், வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் போன்ற விண்ணப்பங்கள் முதலானவை ஆய்வு செய்யப்பட்டு, அவர்களது கோரிக்கைகள் விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டன. தொடர்ந்து, 2019-ல் முதல்வராக இருந்தபோது, ‘முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்’ மூலம் நானும், அமைச்சர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, சுமார் 5,08,179 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக, தமிழகம் முழுவதும் பெரிய பெரிய பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கி, பூட்டி சாவிகளை தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் ஸ்டாலின். இன்றுவரை அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டதா, எத்தனை லட்சம் மனுக்கள் பெறப்பட்டன? அந்தக் கோரிக்கைகள் உண்மையாக தீர்க்கப்பட்டனவா? அல்லது ஒப்புகைச் சீட்டு மட்டும் வழங்கப்பட்டதா என்று நான் பலமுறை எழுப்பிய கேள்விகளுக்கு உண்மையான புள்ளி விவரங்களை இந்த ஆட்சியாளர்கள் இதுவரை வெளியிடவில்லை. அந்தப் பெட்டிகளின் சாவிகளை ஸ்டாலின் தொலைத்துவிட்டாரோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். அன்று மனு கொடுத்தவர்களிடம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை வழங்கிய ஸ்டாலின், அதை எடுத்துக்கொண்டு நேரடியாக கோட்டைக்கு வந்து என்னை முதல்வர் அறையிலேயே சந்திக்கலாம் என்று பசப்பு வார்த்தை பேசினார். இதுவரை ஒருவர்கூட ஒப்புகைச் சீட்டோடு சென்னைக்கு வந்து திமுக அரசின் முதல்வரை சந்தித்ததாகத் தெரியவில்லை. ஒருசில மாதங்களுக்கு முன்பு காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே, தனது பெண் குழந்தையுடன் கோட்டைக்குச் சென்று முதல்வரிடம் மனு கொடுக்க முடியவில்லை என்று பேட்டி அளித்ததை அனைத்து ஊடகங்களிலும் பார்த்தோம். திராவிட மாடல் என்ற பெயரால் எந்தவித கொள்கையும் இல்லாமல், கொள்ளையடிப்பதை ஒரு கலையாகக்கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆட்சியாளர்கள், விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷூட் மூலம் தமிழகத்தை தொடர்ந்து ஆண்டுவிடலாம் என்ற நினைப்பில், எப்படியெல்லாம் மக்களை வஞ்சிக்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள் இதோ. ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுவதற்குக்கூட ‘முதல்வரின் முகவரித் துறை’, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’, ‘மக்களுடன் முதல்வர்’, ‘நீங்கள் நலமா?’, ‘மக்களுடன் முதல்வர் - நகரம் மற்றும் ஊரகம்’ ‘மக்களுடன் முதல்வர் - பட்டியலினத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர்’ என்று பல்வேறு பெயர்களைச் சூட்டி தமிழக மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று மக்களை ஏமாற்றியதுதான் மிச்சம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி மூலம் மனுக்களை வாங்கி சாவியை தொலைத்துவிட்ட விளம்பர முதல்வர் ஸ்டாலின், தற்போது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை மனதில்கொண்டு, மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், வரும் நாட்களில் ‘இல்லந்தோறும் நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெறும் திட்டமிட்ட நாடகத்தை’ அரங்கேற்ற உள்ளதாகத் தெரிய வருகிறது. முதல்வரின் தனிப் பிரிவுக்கு கலர் கலராக காகிதப் பூக்களைப் போல் பல்வேறு பெயர்களைச் சூட்டி, அப்பாவி தமிழக மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வேடிக்கை விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் விளம்பர மாடல் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் அவர்களே, தமிழக மக்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். இனி அவர்களை நீங்களும், உங்களது கூட்டாளிகளும் ஏமாற்ற முடியாது. பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போதும், தொழிலாள தோழர்கள் நசுக்கப்பட்ட போதும், துப்புரவுத் தொழிலாளர்கள் பெயரில் அவர்களுக்குரிய மத்திய அரசின் திட்டங்களை ஒருசிலரே அனுபவிக்கும் போதும், இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் முதன்மை மாநிலம் என்ற பெயரை பெற்ற போதும், 2021 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போதும், ஏவல் துறை மூலம் ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுத்த போதும் என்று இன்னும் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு பல்வேறு சுமைகளை தமிழக மக்களின் தலையில் சுமத்தியபோதும், இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்தும் கூட்டணி தர்மம் என்ற பெயரால் பல கட்சிகள் அறிவாலயத்தை சுற்றிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கக்கூடியதாகும். எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா, ரோஜாதான் என்று சொல்வார்கள். அது ரோஜா பூவுக்கு உள்ள பெருமை. அதுபோல், மக்களிடம் மனு வாங்கி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுதான் ஒரு ஆட்சியின் கடமை. ஆனால், ஒரு திட்டத்துக்கு பல்வேறு பெயர்களைச் சூட்டி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினும், அவரது கூட்டமும் நினைத்தால், அவர்களுக்கு 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக மக்கள் தக்க பதிலடி தருவதற்கு தயாராக உள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
Next Story