கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அங்கீகாரம் தர அறிவியல்பூர்வ சான்று தேவை: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்

X

தமிழகத்தில் நடைபெறும் கீழடி அகழ்வாராய்ச்சியில் அறிவியல் பூர்வமான சான்றுகள் இன்னும் தேவைப்படுகின்றன. அவ்வாறு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்தார்.
சென்னையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சி காலம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இக்காலகட்டத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. 30 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் தலைமையில் ஊழல் இல்லாத, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது. உலக அளவில் இந்தியாவின் பெயர் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொருளாதார வலுப்படுத்தப்பட்டுள்ளது. 2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற லட்சியத்தோடு பலமான அடித்தளத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் கீழடி அகழ்வாராய்ச்சியானது அறிவியல்பூர்வமான, தொழில்நுட்பரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன் ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படும். இது மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அதனை முழுமையாக ஆய்வு செய்யட்டும். அவர்கள் தொழில்நுட்பரீதியாக நிரூபிக்கட்டும். அவர்களே முடிவு செய்யட்டும். இது அரசியல்வாதிகள் முடிவு செய்யும் விஷயம் அல்ல. தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பிரதமர் மோடியும் தமிழின் பெருமையை உலக அளவில் எடுத்துச் சொல்லி வருகிறார். ராகுல் காந்தியும், காங்கிரஸாரும் பிரதமர் மோடியின் சாதனையை விமர்சனம் செய்யலாம். ஆனால், வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்து வருகிறது. மத்திய தணிக்கை துறை அறிக்கையில் சாலை அமைப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தை பொருத்தவரை நிலங்கள் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மாநில அரசுகள் செய்கின்றன. எனவே, நிதி கூடுதலாக செலவிடப்பட்டு இருக்கலாம். இதுதொடர்பாக ஆய்வு செய்கிறோம். அதற்காக இதையும் திமுகவினரின் 2ஜி ஊழல் வழக்கோடு ஒப்பிட வேண்டியது இல்லை. இது சில நடைமுறை குறைபாடுகள்தான். இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை மற்றும் மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக, பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டு கால சாதனை மலரை அவர் வெளியிட நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.
Next Story