ரயிலில் சென்று சென்னையில் பூட்டிய வீடுகளில் திருட்டு: பெங்களூருவை சேர்ந்த பெண் கைது

X
சென்னை குமரன் நகர், முருகேசன் தெருவில் வசிப்பவர் பாலமுருகன் (38). இவர் கடந்த 1-ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவர் வைத்த இடத்தில் வீட்டின் சாவியை காணவில்லை. இதையடுத்து, மாற்று சாவி கொண்டு வீட்டை திறந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நகை, பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில், பாலமுருகன் வீட்டில் கைவரிசை காட்டியது கர்நாடகா மாநிலம், வடக்கு பெங்களூரு பாரதி நகரைச் சேர்ந்த ஜெயந்தி (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

