அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
X
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்ற வழக்கில் முறையான விசாரணை நடக்கவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறை வழக்கில், மாநில போலீசார் சார்பில் நடக்கும் விசாரணை போதுமானதல்ல என்றும், உண்மை வெளிவர வேண்டுமானால் இந்த வழக்கு மத்திய விசாரணை அமைப்பான சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவையில் நேற்று நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது, பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. விசாரணை குழு நேர்மையாக செயல்படவில்லை. முக்கியமான 24ம் தேதி, வழக்கில் முக்கிய குற்றவாளியான ஞானசேகரன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலைவேளை விடுவிக்கப்படுகிறார். அதே நாளில் பல தொலைபேசி அழைப்புகள் நடக்கின்றன. அமைச்சர் மா. சுப்பிரமணியன், கோட்டூர் சண்முகம், பிஆர்ஓ நடராஜன் உள்ளிட்டோர் இடையே நடந்த உரையாடல்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன, என்றார். 24ம் தேதி பல அதிகாரிகள் மற்றும் போலீசாரிடையே தொடர்ச்சியான தொடர்புகள் இருந்துள்ளன. அதில், சண்முகத்திடம் அமைச்சர் நேரடியாகவும், பின்னர் நடராஜனிடம் சண்முகம் பேசுகிறார். இந்த உரையாடல்களுக்கு சிறப்பு புலனாய்வு குழு எந்தவிதமான விசாரணையும் நடத்தவில்லை. அதேபோல, ஞானசேகரன் சம்பவத்திற்கு பிறகு போலீசாரிடம் பேசியது, அவரது கைப்பேசியில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு வீடியோவில் காணப்படும் பெண்ணை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் மேல்முறையீடு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். நீதிமன்ற நடவடிக்கையை மதிக்கிறேன். ஆனால் இது போன்ற விசயங்களில் அரசியல், அதிகாரப்பூர்வ அழைப்புகள், அதிகாரிகளின் முடிவுகள் – அனைத்தும் விசாரணையின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குகின்றன. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். அதுவே உண்மை வெளிவர வழிவகுக்கும், என்றார். யார் தன்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தாலும் அதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.
Next Story