பேராவூரணி அரசு மருத்துவமனை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டடத்தை அகற்ற கோரிக்கை

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனை முன்னால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டடத்தை அகற்ற வேண்டும் என அனைத்து கட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வே.ரெங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம், திராவிடர் கழகம் இரா.நீலகண்டன், தமிழக மக்கள் புரட்சி கழகம் மதியழகன், அறநெறி மக்கள் கட்சி, தமிழ் வழி கல்வி இயக்கம், மனிதநேய ஜனநாயக கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள், பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, "பேராவூரணி அரசு மருத்துவமனை சுற்றுச்சுவருக்கு முன்னால், வாடகை கார் மற்றும் வேன் நிறுத்தும் இடம் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் சுமார் 25 வருட காலமாக இயங்கி வருகிறது. இதில் சிறிய ஓட்டு கொட்டகையில் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் தங்கி வாடகை வாகனங்களை இயக்கி வந்தனர். இதில் ஒரு பிள்ளையார் சிலை வைத்திருந்தனர். இது பேராவூரணி நகரின் மையப்பகுதியில் சென்டர் மீடியனுடன் இரு பக்க சாலையாக மாறியவுடன் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக வாடகை கார் மற்றும் வேன் நிறுத்தும் இடம் உள்ளது. திடீரென கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலைச் சுற்றி பில்லர் குழி வெட்டி ரோட்டில் கான்கிரீட் அமைத்து கம்பி நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக 23.7.2024 அன்று புகார் மனு கொடுக்கப்பட்டவுடன் தாங்கள் தலையிட்டு பில்லர் கம்பிகள் அகற்றப்பட்டு விட்டது. ஆனால், தற்போது மீண்டும் புதிய வடிவத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இந்த இடத்தில் பெரிய அளவில் சாலையிலேயே கான்கிரீட் போட்டு பைப் வைத்து சுற்றுச்சுவர் எழுப்பிக் கொண்டுள்ளனர். போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும், தினசரி அரசு மருத்துவமனைக்கும் வரும் நோயாளிகளுக்கும் மிகவும் இடையூறாக இருக்கிறது. எனவே இந்த கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Next Story

