உற்சாகத்துடன் நடைபெற்ற மீன் பிடி திருவிழா.
மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு போட்டி போட்டு நாட்டு வகை மீன்களை பிடித்து மகிழ்ச்சி மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள பெரிய கண்மாய் என்று அழைக்கக்கூடிய சோழப்பேரேரி கண்மாயில் மீன்பிடி திருவிழா பாரம்பரிய முறைப்படி இன்று (ஜூன்.14) மீன் பிடித்திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களான திருவாதவூர், மேலூர், மாணிக்கம்பட்டி, கலுங்கம்பட்டி, தமராக்கி, ஆமூர், சருகுவலையபட்டி, நத்தம், மணப்பாறை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேன், இருசக்கர வாகனத்தில் இப்பகுதியில் நேற்று இரவு கண்மாய்கரையில் குவிய ஆரம்பித்தனர். தொடர்ந்து கிராம பெரியவர்கள் கோவிலில் மேளதாளத்துடன் வானவேடிக்கை முழங்க வழிபாடு செய்து விட்டுவந்து வெள்ளை வீசி மீன்களை பிடிக்க அனுமதி அளித்தவுடன் ஒன்று சேர கண்மாய்குள் இறங்கிய பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான கச்சா, ஊத்தா, மற்றும் கூடை மீன்பிடி உபகரணங்களை வைத்து, பல்வேறு நாட்டுவகை மீன்களான கட்லா, கெளுத்தி, ரோகு, ஜிலேபி, அயிரை உள்ளிட்டவற்றை ஆர்வமுடன் பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் 5 கிலோ முதல் 10 கிலோ வரை மீன்களை பிடித்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சரிசமமாக கலந்து கொள்ளும் இது போன்ற சமத்துவ மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவதன் மூலம் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதுபோன்ற மீன்பிடித் திருவிழாவில் மக்கள் தங்களுக்குள் ஏற்படும் வேற்றுமையை மறந்து சமத்துவமாக மீன்களை பிடித்து மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு பிடித்த மீன்களை யாருக்கும் விற்காமல் வீட்டில் சமைத்து சாப்பிடுவார்கள்.
Next Story





