கோவை: வங்கியில் தீவிபத்து - உயிர் சேதம் தவிர்ப்பு!
கோவை சிறுவாணி சாலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே அமைந்துள்ள இந்தியன் வங்கியில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வங்கி விடுமுறை என்பதால் பூட்டிய நிலையில் இருந்தது. திடீரென புகை மூட்டம் வெளியே வந்ததை கண்ட பொதுமக்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் வழங்கினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த புதூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வங்கி அதிகாரிகள் ஷட்டரை திறந்தபோது, அங்கிருந்த UPS பேட்டரியில் ஏற்பட்ட மின் கோளாறால் தீ பரவியுள்ளதென்று தெரியவந்தது. பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விடுமுறை தினம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சேமிக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் மின் சாதனங்களில் சில எரிந்து சேதமடைந்தன. பேரூர் காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story



