மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீர் முகாம்.

X
NAMAKKAL KING 24X7 B |16 Jun 2025 6:14 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கைபெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பனிரென்டாம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களுக்காக உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி, முதற்கட்டமாக கடந்த, 14.5.2025 அன்று முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நாமகிரிப்பேட்டை, இராசிபுரம் மற்றும் கொல்லிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கும், 16.5.2025 அன்று திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 20.05.2025 அன்று மூன்றாம் கட்டமாக நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம் மற்றும் புதுச்சத்திரம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 2023 -24 மற்றும் 2024 -25 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரையும் உயர்கல்விக்கு செல்வதை உறுதி செய்திட மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கல்லுரி கனவு, உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004251997, வாட்ஸ்அப் எண்: 9788858794) சிறப்பு குறைதீர் முகாம் என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பெற்றோர் அற்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவர்கள், உயர்கல்விக்கு செல்ல பயப்படும் மாணவர்கள், கல்லூரி கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால் உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள், உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயர்கல்வியை தொடர இயலாத மாணவர்கள், பெற்றோர்கள் விருப்பமின்மையால் உயர்கல்வியை தொடர இயலாத மாணவர்கள், சமூக காரணங்களால் உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், திருமணம் போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர இயலாத மாணவர்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவர்கள் என பல்வேறு காரணங்களால் உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்களுக்கு தேவையான உதவிகளும், ஆலோசனைகள் தேவைப்படும் மாணவர்கள் / பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டங்கள் மூலம் மாதம்தோறும் உதவித்தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். அதனடிப்படையில் இன்று நடைபெற்ற இச்சிறப்பு முகாமில்,, மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான சந்தேகங்கள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்து மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டுதலின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடரமுடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம் அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, உதவி ஆணையர் (கலால்) என்.எஸ்.ராஜேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார் உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
