கருப்பூரில் கியாஸ் நிரப்பும் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

X
சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சமையல் எரிவாயு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நிரப்பப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி, திருப்பத்தூர் உள்பட 10 மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு 80 தொழிலாளர்கள் கியாஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 12 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி தொழிற்சாலை நுழைவுவாயில் முன்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் போராட்டம் நேற்று 5 நாட்களாக நடந்தது. இந்த நிலையில் தொழிற்சாலை பாதுகாப்பு உதவி கமிஷனர் சரவணன், நேற்று இரவு தலைமையில் அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன உதவி பொது மேலாளர் ஜெய்சங்கர், மேலாளர் கிஷோர் பாபு, ஆலை மேலாளர் சண்முகம்ராஜ், தொழிலாளர்கள் சார்பில் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயன், இணைச்செயலாளர் சேகர், ஐ.ஓ.சி. பிளான்ட் தொழிலாளர் சங்க தலைவர் அய்யந்துரை மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆலை நிர்வாகம் சார்பில் 10 பேரை பணியில் சேர்த்து கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது. மேலும் 2 தொழிலாளர்கள் பணி நீக்கம் குறித்து வருகிற 26-ந்தேதி சென்னையில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். அதனால் 5 நாள் நீடித்த தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Next Story

