பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்தால் மண் வளம் மேம்படும்

X
அரியலூர்,ஜூன் 17- அரியலூர் மாவட்ட விவசாயிகள், தங்களது வயலில் மண் வளத்தை மேம்படத்திடவும், தரமான விதை உற்பத்தி செய்யவும் அதற்கு பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் எனறார் திருச்சி விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குநர் பா .நளினி. இதுகுறித்து அவர் தெரிவித்தது: மண் வளத்தை மேம்படுத்திட உயிர் உரங்கள் மற்றும் உயிர்ம இடுபொருள்களின் பங்கு இன்றியமையாததாகும். தற்போது தொழு உரம் அதிகமாக கிடைக்காத நிலையில் பசுந்தாள் உர பயிர்களை பயிரிடுவது முக்கியமானது.இவை மண் அரிப்பை தடுப்பதுடன், மண்ணில் தழை சத்தினையும், ஊட்டச்சத்தினையும் நிலை நிறுத்துகின்றன. சணப்பு, தக்கைப்பூண்டு, அகத்தி போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை, பயிர் சாகுபடி இல்லாத தருணத்தில், மழையை பயன்படுத்தி ஏக்கருக்கு 15 முதல் 20 கிலோ என்ற விதையளவை பயன்படுத்தி விதைத்து, நன்கு வளர்த்து, பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதன் மூலம் நிலத்தின் வளம் மேம்படுகிறது. களர் மற்றும் உவர் நிலங்களை மேம்படுத்துவதற்கு தக்கைப்பூண்டு பசுந்தாள் பயிரிட்டு மடக்கி உழுவது சாலச்சிறந்ததாகும். அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்க ளிலும் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் பசுந்தாளுர விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது . பசுந்தாள் உரம் பயிரிட்டு உழ இயலாத விவசாயிகள் பசுந்தழைகளான புங்கம், வேம்பு, எருக்கு, ஆவாரை, பூவரசு இலைகளை வெட்டி எடுத்து வந்து, வயலில் இட்டு உழுது மக்கவைத்து பின் பயிர் செய்யலாம்.இவ்வாறு பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்து மண் வளத்தை மேம்படுத்துவதன் மூலம் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருவதுடன் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கும் உணவளிப்பதால் நல்ல மகசூல் மற்றும் தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Next Story

