நிலக்கரி ரயிலில் தீவிபத்து : கோவில்பட்டியில் நிறுத்தம்

நிலக்கரி ரயிலில் தீவிபத்து : கோவில்பட்டியில் நிறுத்தம்
X
தூத்துக்குடியில் இருந்து சென்ற நிலக்கரி ரயிலில் தீவிபத்து : கோவில்பட்டியில் நிறுத்தம்
தூத்துக்குடியில் இருந்து கரூருக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கோவில்பட்டியில் ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகழுர் காகித தொழிற்சாலைக்கு நேற்று காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் புறப்பட்டது. கடம்பூர்-கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து, நிலக்கரி சிதறி கீழே விழுந்தது. இதில், இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்ததை அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே இருப்புப் பாதை பராமரிப்பாளர்கள் ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி கீழே விழுந்து புற்களில் தீப்பிடித்து எரிவதை கடம்பூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கடம்பூர் ரயில்வே ஊழியர்கள் சரக்கு ரயிலில் இருந்த கார்டுக்கு தகவல் தெரிவித்தனர்.  இதை யடுத்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உடனடியாக சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, பெட்டிகளை ஆய்வு மேற்கொண்டதில் 17ஆவது பெட்டியில் இருந்த நிலக்கரியில் தீப்பிடித்து புகை வெளிவருவது தெரியவந்தது. பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கோவில்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ரயில்வே மின் பொறியாளர்கள், ஊழியர்கள் விரைந்து வந்து ரயில்வே இருப்பு பாதையில் உயர் அழுத்த மின் பாதையில் சென்ற மின்சாரத்தை நிறுத்தினர். அதைத் தொடர்ந்து சரக்கு ரயில் பெட்டியில் தீயணைப்பு படையினர் ஏறி தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோவில்பட்டி வழியாக செல்லும் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் நள்ளி ரயில் நிலையத்திலும், சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தீயணைப்பு பணி நடைபெற்றது. தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இருப்புப் பாதை உயர் அழுத்த மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
Next Story