திருச்சுழி யில் இன்ஸ்டாகிராம் மூலமாக புகையிலை விற்பனையில் கொடி கட்டி பறந்த கும்பல் - கொத்தாக தூக்கிய திருச்சுழி போலீசார்*

X
*தலைமறைவான முக்கிய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 2 பேர் கைது - ஹோண்டா சிட்டி கார் மற்றும் ரூ. 29 இலட்சம் பறிமுதல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து திருச்சுழி டிஎஸ்பி பொன்னரசு உத்தரவுப்படி, திருச்சுழி காவல் நிலைய போலீசார் தமிழ்பாடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ மற்றும் பின்னால் வந்த காரை மடக்கி அதில் வந்த அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், வடக்குநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜபூபதி, பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜகோபால் ஆகிய மூவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ஆட்டோ மற்றும் காரில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்புற பகுதிகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டு, ஒவ்வொரு பகுதிகளுக்கும் வேன், லாரி மூலம் புகையிலைப் பொருட்கள் விநியோகம் செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக டன் கணக்கில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் அந்த மொத்த புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்து எடை பார்த்ததில் அந்த புகையிலை பொருட்கள் சுமார் 2500 கிலோ இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட 4 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், வாகனங்களையும் திருச்சுழி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் நபர்கள் தலைமறைவான நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருச்சுழி அருகே தனியார் விடுதியில் சோதனை செய்ததில் சென்னையைச் சேர்ந்த சேர்ந்த கற்குவேல் மற்றும் கனகலிங்கம் ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இன்ஸ்டாகிராம் மூலமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு ஹோண்டா சிட்டி கார், சுமார் 29 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய 10-க்கும் மேற்பட்ட செல்போன்களை திருச்சுழி தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் கைது செய்து திருச்சுழி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

