மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சாரம் வெற்றி  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சாரம்  வெற்றி   
X
பிரச்சார இயக்கம்
தஞ்சாவூர் மாவட்டம்,  திருவையாறு ஒன்றியம் காருகுடியில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தின் போது வந்த குடியிருப்போருக்கு பிரச்சினைக்கு போராடி உடனடி தீர்வு காணப்பட்டது. கடந்த ஜூன்.12 அன்று மக்கள் சந்திப்பு இயக்கம் இப்பகுதியில் நடைபெற்றது. அப்போது திருவையாறு தாலுகா, காருகுடியில் வெள்ளக்கரை என்ற இடத்தில் 40, 50 வருடங்களாக குடியிருந்து வருபவர்களை நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி அகற்றும் முயற்சி நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை நாடினர்.  இதனையடுத்து 15.06.2025 தஞ்சை வந்த தமிழக முதல்வருக்கு வருவாய் கோட்டாட்சியர் வாயிலாக மனு கொடுக்கப்பட்டது.  16.06.2025 அன்று மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம், குடிமனைப்பட்டா, குடியிருக்க தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  இந்நிலையில் 17.06.2025 செவ்வாய்க்கிழமையன்று,  திருவையாறு ஒன்றியம் காருகுடியில் காலம் காலமாக வசித்து வரும், மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களை, ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வருவாய்த்துறை,  நீர்வளத்துறையினர் காவல்துறையைக் கொண்டு அச்சுறுத்தி, பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்த மேற்கொண்ட முயற்சியை தடுத்து நிறுத்தி நேரடி களப் போராட்டத்தை பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சிகளையும் இணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்திய போராட்டத்துக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. இதையடுத்து, திருவையாறு வட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், மற்றும் அலுவலர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், காருகுடி அக்ரஹாரத்தில் சாலையோரம் குடியிருக்கும் 7 குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கப்பட்டது. இதற்கான மனைப்பட்டா வரும் திங்கட்கிழமை அன்று வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  இதே காருகுடியில் தான்,  50 ஆண்டுகளுக்கு முன்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சுடுகாட்டு பாதைக்காக வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை தியாகி என்.வி நடத்தி வெற்றி கண்டதை அந்த பகுதி முக்கிய பிரமுகர்கள் நினைவு கூர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய தலையீட்டையும்,  வெற்றியையும் பாராட்டி கட்சிக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தனர். இந்த கிளர்ச்சி இயக்கத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்.பிரதீப் ராஜ்குமார், எம்.பழனி ஐயா, எம்.ராம், கே.மதியழகன், எம்.கதிரவன், எம்.அறிவழகன், பி.ஏ. பழனிச்சாமி மற்றும் கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story