சேலம் தெற்கு தாலுகாவில் "உங்களை தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் நடந்தது.

X
சேலம் தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் "உங்களை தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து சேலம் தெற்கு தாலுகாவில் கள பணிக்கு செல்லும் அலுவலர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், சத்துணவு கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள் மற்றும் தாசில்தார் அலுவலகம், தெரு விளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், பஸ் நிலையங்கள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்நிலையில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் உத்தமசோழபுரத்தில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார். அங்கு விளைபொருட்கள் இருப்பு பதிவேடு, இ-நாம் மின்னணு ஏல முறை, அன்றாட சந்தை நிலவரம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பூலாவரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையை தூய்மையாக பராமரிக்கவும், சிகிச்சை பெற வருகை தருபவர்களுக்கு விரைவான சேவை வழங்குவதை உறுதிபடுத்திடவும் அறிவுறுத்தினார். மேலும் மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறித்தும், சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பூலாவரி அக்ரஹாரத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு தினசரி வருகைதரும் வாசகர்களின் எண்ணிக்கை குறித்தும், புத்தகங்களின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
Next Story

