திருவாய்மூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு

திருவாய்மூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு
X
அஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் பிரசித்தி பெற்ற சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், காசிக்கு அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், உன்மத்த பைரவர், பீஷண பைரவர் ஆகிய 8 பைரவர்கள் ஒரே நேர்கோட்டில், அஷ்ட பைரவர் சன்னதியில் அருள்பாலித்து வருவது இக்கோயிலுக்கு தனிச் சிறப்பாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு யாகம் சிவாச்சாரியார் பிச்சைமணி தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நாதஸ்வர வித்துவான் டி.ஆர்.பி.அருள்மொழி கார்த்திக்  குழுவினரின் நாதஸ்வரம், மேளதாள இன்னிசையுடன் கடம் கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, கடத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரித்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், நாகை மட்டுமின்றி மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். பின்னர், அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story