தறிப்பட்டறையை காலி செய்ய மறுத்த பெண்ணின் வீடு புகுந்து சூறை

தறிப்பட்டறையை காலி செய்ய மறுத்த பெண்ணின் வீடு புகுந்து சூறை
X
குமாரபாளையத்தில் தறிப்பட்டறையை காலி செய்ய மறுத்த பெண்ணின் வீடு புகுந்து சூறையாடப்பட்டது.
குமாரபாளையத்தில் தறிப்பட்டறையை காலி செய்ய மறுத்த பெண்ணின் வீடு புகுந்து சூறையாடப்பட்டது. ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம், 55. இவரது மனைவி ராணி, 50. இந்த தம்பதியர்கள் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு குமாரபாளையம் பகுதியில் பிழைப்பிற்காக குடியேறி வசித்து வருகின்றனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு குமாரபாளையம் ஆலங்காட்டு வலசு பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தறி பட்டறையை, லீசுக்கு எடுத்து இரண்டு மகன், மருமகள், பேரக் குழந்தையுடன் தங்கியிருந்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வருடம் முன்பு தர்மலிங்கத்தின் இரண்டாவது மகன் அருண்குமார், 27, ஒட்டன் கோயில் பகுதியில் உள்ள ஒரு தறி பட்டறையில் வேலைக்கு சேர்ந்து அங்கு பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அருண்குமார் வேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அருண்குமாரின் மனைவி புவனேஸ்வரி, கணவர் இறந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனிப்பட்டறை உரிமையாளர் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். தர்மலிங்கம் லீசுக்கு எடுத்த தறிப்பட்டறை உரிமையாளரும், அருண்குமார் வேலை செய்த தறிப்பட்டறை முதலாளியும் ஒரே சங்கத்தில், உறுப்பினராக உள்ளதால், புவனேஸ்வரி வசம் வழக்கை வாபஸ் வாங்க சொல்லியுள்ளனர். அதற்கு புவனேஸ்வரி சம்மதிக்காததால் கடந்த சில மாதங்களாக தர்மலிங்கம் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்த தறிப்பட்டறையை காலி செய்யச் சொல்லி பல்வேறு விதத்தில் அவருக்கு தொந்தரவு கொடுத்தனர். இது குறித்து ராணி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, 2 மாதத்திற்கு முன்பு இருதரப்பினரையும் போலீசார் நேரில் அழைத்து சமரசம் செய்து அனுப்பினர். போலீசாரின் சமரச பேச்சால் சிறிது நாட்கள் அமைதியாக இருந்த தனிப்பட்டறை முதலாளிகள் மீண்டும் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த குடும்பத்தினர் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தனர். இவர்களின் தொடர் புகாரின் காரணமாக பொறுத்துக் கொள்ள முடியாத பணம் படைத்த முதலாளிகள், அவர்கள் லீசுக்கு எடுத்து நடத்தி வரும் தறி பட்டறைக்கு சந்திரசேகர், ரவி, மேகலா, வசந்தி, சாந்தி, சித்ரா, நித்தீஸ், சீனிவாசன் உள்பட சிலர் கும்பலாக வந்தனர். தர்மலிங்கத்தின் குடும்பத்தினர் இல்லாததால்,வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை எடுத்து வீதியில் வீசினர். மேலும், வீட்டின் மேற் கூரை ஓடுகளை கழற்றி உடைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த புவனேஸ்வரியின் சேலையை பிடித்து இழுத்து, கிழித்து அவரை பல்வேறு இடங்களில் தாக்கி மானபங்கம் செய்ய முயன்றனர். சுதாரித்துக் கொண்ட அவர் தனது செல்போனை எடுத்து போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த கும்பல், செல்போனை பிடுங்கிக் கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. மர்ம கும்பல் தாக்கியதில் புவனேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தவரை உறவினர்கள் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்பொழுது வீடுகளை இழந்து ஒரு குடும்பமே குழந்தைகளுடன் குமராபாளையம் அரசு மருத்துவமனையில் வெளிப்புற பகுதியில் படுத்து உறங்கி வருவதை அப்பகுதியை கடந்து செல்பவர்கள் வேதனையுடன் பார்த்து செல்கின்றனர். தறிப்பட்டறையை காலி செய்யச்சொல்லியும், கணவன் இறப்புக்கு நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற வேண்டியும், வீடுகளை சேதப்படுத்தியதாக, தறிபட்டறை உரிமையாளர்கள் மீது புவனேஸ்வரி தரப்பினரும், வாடகை கேட்க போகும் போது, புவனேஸ்வரி தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக, தறிப்பட்டறை உரிமையாளர் தரப்பினரும் புகார் கொடுத்ததால், ,இரு தரப்பினர் மீதும் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story