உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் பெற கட்டுப்பாட்டு அறை உருவாக்கம்

X
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசால் உயர்க்கல்வி வழிகாட்டுதல் செயல்திட்டம் கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் 2022-23-ம் கல்வியாண்டில் 69 சதவீத மாணவர்களும், 2023-24-ம் கல்வியாண்டில் 74 சதவீத மாணவர்களும் உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொண்டு உயர் கல்வி பயின்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 2024-25-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் உயர் கல்வி சேர்க்கை மேற்கொள்ள இலக்கினை அடைவதற்கு மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கட்டுப்பாட்டு அறையின் மூலம் ஆதரவற்ற மாணவர்கள், தாய் அல்லது தந்தை இழந்த மாணவர்கள், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள், அகதிகள், மேல்நிலை வகுப்புகளில் தேர்ச்சி பெறாதவர்கள், உயர்க்கல்வி சார்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் அறை எண்.101-ல் செயல்பட்டு வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உயர்க்கல்வி சேர்க்கை தொடர்பாக சந்தேகங்கள், வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

