சேலம் கிச்சிப்பாளையத்தில் பிறந்த சில மணி நேரத்தில் பெண் குழந்தை முட்புதரில் வீச்சு

சேலம் கிச்சிப்பாளையத்தில் பிறந்த சில மணி நேரத்தில் பெண் குழந்தை முட்புதரில் வீச்சு
X
போலீசார் விசாரணை
சேலம் கிச்சிப்பாளையம் காளிகவுண்டர்காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து பாத்திமா நகர் செல்லும் சாலையோரம் முட்புதரில் நேற்று மதியம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதை கேட்ட அந்த வழியாக சென்ற சிலர் அதன் அருகே சென்று பார்த்தனர். அப்போது பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று போர்வையால் சுற்றப்பட்டு கட்டை பையில் இருந்தது. மேலும் அந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கப்படாததால் ரத்தமாக இருந்தது. பையில் 2 சிறிய கத்திகளும் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து அவர்கள் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த குழந்தையை பெற்றெடுத்த பெண் யார்?, எதற்காக வீசி சென்றார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முட்புதரில் பெண் குழந்தையை வீசி சென்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story