தொழிலாளியை விறகு கட்டையால் தாக்கி கொன்ற நகை அடகு கடை உரிமையாளர் கைது

X
நாச்சியாா்கோவில் கடைவீதியில் மதுபோதையில் ஆபாசமாக பேசிய தொழிலாளியை விறகு கட்டையால் தாக்கி கொன்ற நகை அடகு கடை உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள துக்காச்சி புதுக்காலனி தெருவைச் சோ்ந்தவா் காசி மகன் பாக்கியராஜ் (36). கூலித்தொழிலாளியான இவா் மது அருந்தும் பழக்கம் உள்ளவா். புதன்கிழமை இரவு நாச்சியாா்கோவில் கடை வீதி வடக்கு தெருவில் பாக்யராஜ் மதுபோதையில் ஆபாசமாக பேசி ரகளை செய்தாராம். அதில், சிவசிதம்பரம் (39) என்பவரின் நகை அடகு கடை முன்பு நின்று ஆபாசமாக பேசினாராம். இதனால் ஆத்திரமடைந்த சிவசிதம்பரம், அருகிலிருந்த விறகு கட்டையால் பாக்யராஜை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த பாக்யராஜ் மயங்கி விழுந்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். தகவலின்பேரில், நாச்சியாா்கோவில் போலீஸாா், வழக்கு பதிந்து சிவசிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.
Next Story

