மறவன் வயல் கிராம பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் எம்எல்ஏ

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ராவுத்தன்வயல் ஊராட்சி, மறவன் வயல் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சனிக்கிழமையன்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி மக்கள், "தாங்கள் குடியிருந்து வரும் பகுதி நீர்நிலைப் புறம்போக்கு பகுதியில் இருப்பதாகக் கூறி, நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் வெளியேற்ற முயற்சிப்பதாகவும், தங்களுக்கு அரசு சார்பில் மனைப்பட்டா வழங்கி, வீடு கட்டித் தர வேண்டும். குடியிருப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்கவும், சாலை, சுடுகாடு வசதி செய்து தர வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தனர். " மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக, மாற்று இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்களிடம் பேசி, விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும். கலைஞர் கனவு இல்லம் கட்டித் தரவும், சாலை, சுடுகாடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்" என சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அப்போது உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, ராவுத்தன்வயல் கடற்கரை பகுதியில் முகத்துவாரம் தூர்வார உள்ள இடத்திலும் ஆய்வு செய்தார் அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தஸ்தகீர், கட்சி நிர்வாகிகள் ஹமீத், அஜ்மீர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story

