பூட்டிய வீட்டில் ஐடி ஊழியர் அழுகிய சடலம்

பூட்டிய வீட்டில் ஐடி ஊழியர் அழுகிய சடலம்
X
இரணியல்
குமரி மாவட்டம் இரணியல் மேல தெருவை சேர்ந்தவர் ஜெகன் கோபால் (50). அமெரிக்காவில் ஐடி ஊழியர் ஆக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவியும் அமெரிக்காவில் வேலை பார்த்து வருவதால் மனைவி மகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன் கோபாலுக்கு நடக்க முடியாத அளவில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மட்டும் சிகிச்சைக்காக சொந்த ஊரான இரணியலுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஜெகன் கோபால் வீடு கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதை கவனித்த அருகில் உள்ள கடைக்காரர் அவரது உறவினருக்கு நேற்று தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து கதவைத் தட்டி அழைத்த போது அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜெகன் கோபால் ஒரு செயர் அருகில் தரையில் இறந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்த தடம் இருந்தது. இது குறித்து உறவினர்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெகன் கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெகன் கோபால் திடீர் உடல்நல குறைவால் இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story