தஞ்சாவூர் மாவட்டம், பாளையப்பட்டியில் சங்க கால ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ எனப்படும் பகுதியில் காணப்பெறும் ஈமத் தாழிகள் பற்றிப் பாளையப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரெ.கமலதாசன் கொடுத்த தகவலின் பேரில், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தமிழ்த்துறைப் பேராசிரியர் சோ.கண்ணதாசன், பொந்தியாக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் கோ.தில்லை கோவிந்தராசன், வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், சரஸ்வதி மகால் நூலக விற்பனை எழுத்தர் மூ.நேரு (பணி நிறைவு), முனைவர் பட்ட ஆய்வாளர் பெ.வீரமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது; பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து, மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்களே ஈமத் தாழிகள் எனப்பட்டன. இது ஒரு சவ அடக்க முறையாகும். இந்த ஈமத் தாழிகளுக்கு முதுமக்கள் தாழி, முதுமக்கள் சாடி, ஈமப் பேழை, மதமதக்கா பானை என்ற வேறு பெயர்களும் உண்டு. இவ்வடக்க முறை சங்க காலந்தொட்டே இருந்து வருவதைக் “‘குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்” என்னும் சோழ மன்னன் இறந்த போது, ஐயூர் முடவனார் பாடிய பாடல் (புறம் – 228) முதுமக்கள் தாழி பற்றிக் குறிப்பிட்டிருக்கக் காணலாம். இவ்வாறே, ‘’தாழியுடன் கவிப்போர்’’ என மணிமேகலையும் இவ்வழக்கம் குறித்துச் சுட்டியிருக்கக் காணலாம். இவ்வகையில் சங்க காலத்தைச் சார்ந்த ஈமத் தாழிகள் தெற்குப் பாளையப் பட்டியில், ‘தாழவாரி’ எனச் சுட்டப்படும் பகுதியில் ஐம்பத்தெட்டு ஏக்கர் பரப்பளவில் காணப்படுகின்றன. இதுவே சோழ மண்டலத்துள் கிடைக்கப்பெறுகின்ற ஈமக் காடுகளுள் பரப்பளவில் மிகப் பெரிய அளவினதாக இருக்கக் கூடும். இவ்வூரார்கள் பாளை மரங்கள் மிகுந்து காணப்பட்டதால் பாளையப்பட்டியெனப் பெயர் பெற்றதாகக் கூறினாலும் படைவீரர்கள் தங்கியிருக்கும் இடம் பாளையம் எனப்படும். அப்படி தங்கியிருந்த இடத்தே, போர் செய்து இறந்திட்ட வீரர்களுக்காக, எடுக்கப்பெற்ற ஈமத் தாழிகளாக இதிருக்கக் கூடும். இதனாலேயே இவ்வூருக்குக் காரணப்பெயராகக் கொண்டு, இவ்வூரைப் ‘’பாளையப்பட்டி’’ என்று அழைத்திருக்கலாம். இங்கு காணப்படும் வேலைப்பாடுகளுடன் கூடிய அகன்ற வாய்களைக் கொண்ட தாழிகளுள் சில, பல மண்ணரிப்பினால் சிதைந்து சிதறுண்டு வெளியே காணக் கிடக்கின்றன. இவ்வாறு காணப்படும் சிறிய அளவிலான ஈமத் தாழிகள் சிலவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட மட்கலயங்களும் காணப்பெறுவதால், போரில் இறந்தவர்களின் சடலத்தை எரியூட்டி, எஞ்சிய சாம்பலைச் சிறிய மட்கலயங்களில் இட்டுச் சிறிய அளவிலான ஈமத் தாழிகளில் வைத்துப் புதைத்திருக்க வேண்டும் என்பது தெரிய வருகின்றது. அதுமட்டுமன்றி ஈமக் காட்டுப்பகுதி முழுமையும் அரசு புறம்போக்கு நிலமாக இருப்பதால், அகழாய்விற்கு நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினர். மேலும், "இவ்வளவு பெரிய அளவிலான ஈமக் காடு இருக்கும் போது, இவ்விடத்தின் அருகிலேயே அம்மக்களின் வாழ்விடப் பகுதியும் இருக்க வேண்டுமே என்று வினாவிய பொழுது, ஊராட்சி மன்றத் தலைவர் ரெ.கமலதாசன், இவ்வூர் சிவன் கோவில் அருகே உள்ள மேடான நிலங்களை உழுகின்ற பொழுது பானையோடுகள் மேலே அவவ்பொழுது வெளிவருகின்றன. அந்த இடம் கூட மக்கள் வாழ்விடப் பகுதியாக இருந்து இருக்கலாம்" என்றார். மேற்குறித்த செய்திகளின் அடிப்படையில் ஈமக் காட்டினையும், வாழ்விடப் பகுதியாகக் கருதப்படும் இடத்தினையும், தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறையோ, தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையோ ஆய்வு மேற் கொண்டால், சோழ மண்டலத்துச் சங்க காலத் தொன்மை வரலாற்றையும், அக்கால மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டினையும் வெளிக்கொணரலாம் என்பதோடு, இப்பகுதி மிகுந்த தரவுகளைக் கொண்டதாகத் தமிழகத்தில் மற்றொரு கீழடியாக விளங்கிடவும் வாய்ப்புண்டு" என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Next Story



