கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மது போதையில் வந்த இளைஞர்கள் தாக்குதல் – அரசு பஸ் டிரைவர் காயம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மது போதையில் வந்த இளைஞர்கள் தாக்குதல் – அரசு பஸ் டிரைவர் காயம்
X
கோவை காந்திபுரம் அரசு பேருந்து நிலையத்தில் நடந்த கடுமையான மோதலில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை காந்திபுரம் அரசு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த கடுமையான மோதலில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலத்திலிருந்து கோவைக்கு வந்த அரசு பேருந்து, கோவையில் இருந்து எர்ணாகுளம் செல்ல தயாராக இருந்தது. இரவு சுமார் 1 மணி நேரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்த அந்த பஸ்சை இயக்கிய டிரைவர் மகேந்திரன், பின்புற டயரை சோதிக்க பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளார். அந்த நேரத்தில், மகேந்திரா தார் வகை காரில் நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் பேருந்து நிலையம் அருகே வந்துள்ளனர். அவர்கள் கட்டுப்பாடின்றி அதிவேகத்தில் காரை இயக்கி, பேருந்து நிற்கும் இடத்தில் காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த டிரைவர் மகேந்திரன், அந்த இளைஞர்களிடம் கண்டனம் தெரிவித்த போது, அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தீவிரமாகி, காரில் இருந்த இளைஞர்கள் டிரைவரை தாக்கியதாக தெரிகிறது. இதை கண்ட அருகில் இருந்த சில பொதுமக்கள் தலையிட்டு அவர்களை எதிர்த்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த டிரைவர் மகேந்திரன் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரில் வந்த இளைஞர்களில் ஒருவர் மது போதையில் இருந்ததும், அவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்த காரணம் என்ன என்பது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story