திருநங்கைகளுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி கௌரவித்தார் எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ் குமார்.

X
NAMAKKAL KING 24X7 B |24 Jun 2025 5:44 PM ISTமாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்த 14 திருநங்கைகளுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி கௌரவித்தார்.
நாமக்கல் மாவட்டம், துறையூர் சாலை, நகராட்சி திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற திருநங்கைகள் தின விழா மற்றும் சிறப்பு முகாமில், மாநிலங்களவை உறுப்பினர் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்த 14 திருநங்கைகளுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி கௌரவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கை என அழைக்க சட்டம் இயற்றினார். திருநங்கைகளும் இந்த சமுதாயத்தில் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, இந்தியாவிலேயே முதல் முறையாக "தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம்” 2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டது. அவரது வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் திருநங்கைகளின் நலன் காக்கும் வகையில் திருநங்கைகளின் நலன், சமூக பாதுகாப்பு, சமூக அங்கீகாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விடியல் பயணத்திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பேருந்து சேவையை மகளிரை போல திருநங்கைகளும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவித்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்.மேலும், திருநங்கைகள் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி, மாதாந்திர உதவித் தொகை ரூ.1000-த்தில் இருந்து ரூ.1500 ஆக அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் தொடங்க மானிய தொகை, உயர் கல்வி பயில உதவித்தொகை, சுய உதவி குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை. காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் திருநங்கைளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேல் உள்ள 50 திருநங்கைகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1500/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக சுயதொழில் புரிய மானியம் வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் /திருநம்பிகள் ஆகியோருக்கு கல்வி மற்றும் இதர கட்டணம் ஆகியவைகளை திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் அரசே ஏற்கும் என தெரிவித்து திருநங்கைகளை ஊக்குவிக்கும் விதமாக திருநங்கைகளுக்கான கல்வி கனவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி பயிலும் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ சேவை மையம் குளிர்சாதன வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. மேலும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் இம்மையத்தின் வெளிநோயாளிகள் பிரிவு பிரதி வாரம் செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படுகிறது. இப்பிரிவில் மன நல சிகிச்சை மருத்துவர், பொது மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது மூக்கு, தொண்டை மருத்துவர், தோல் சிகிச்சை மருத்துவர் உள்ளடக்கிய மருத்துவர்களைக் கொண்டு மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மருத்துவ சேவைகள் சிறப்பாக வழங்கப்படுகிறது. மேலும், இம்மையத்தில் பால்வினை நோய்கள் மற்றும் தொற்றா நோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சை, அனைத்து வித பொது அறுவை சிகிச்சைகள், பொது மருத்துவ சேவைகள், தோல் நோய்களுக்கான சிகிச்சைகள், மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. எனவே, உங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளுக்கு இச்சேவையினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், திருநங்கைகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாகவும், பிற துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாகவும் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கிடும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச விடியல் பயண திட்டம், மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் பயின்று வரும் மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், அதேபோல மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் உதவித் தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 7,000 நபர்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 16,000 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்தார்கள். தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 3 சுயஉதவி குழுக்களைச் சார்ந்த திருநங்கைகளுக்கு ரூ.30,000/-மதிப்பில் ஆடு வளர்ப்பு கடனுதவிகளையும், 14 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, போட்டித்தேர்வு புத்தகம், சிறப்பு ஓய்வூதியம் மற்றும் தொழிலாளர் நல வாரிய அட்டைகளையும், 5 திருநங்கை ஓட்டுநர்களுக்கு நலவாரிய பதிவு அட்டைகளையும், 4 திருநங்கைகளுக்கு ரூ.6,000/- மதிப்பில் ஓய்வூதியமும் மாநிலங்களவை உறுப்பினர் வழங்கினார். தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.ரேவதி அவர்களையும், 2 மூத்த திருநங்கைகள், 6 திருநங்கை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர், ஆட்டோ ஓட்டுநர், முதல் திருநங்கை காவலர், முதல் திருநங்கை உயர்கல்வி தேர்ச்சி பெற்றவர் மற்றும் உயர்கல்வி பயிலும் முதல் திருநங்கை என பல்வேறு சாதனைகள் புரிந்த 14 திருநங்கைகளுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) க.செல்வராசு, உதவி ஆணையர் (தொழிலாளர் நல வாரியம்) இந்தியா, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர்/ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருநங்கை ரியா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
