கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கும் உத்தரவில் கையெழுத்திட ஆளுநர் தாமதம் செய்கிறார் - உயர்கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு 

கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கும் உத்தரவில் கையெழுத்திட ஆளுநர் தாமதம் செய்கிறார் - உயர்கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு 
X
அமைச்சர் பேட்டி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில், கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  உயர்கல்வி துறையில், மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை, அதிகரிப்பதற்கு, முதல்வரால் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதன்படி இந்தாண்டு 25 சதவீதத்திற்கும் மேலாக கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் 64 கல்லூரிகளில், ஷிப்ட் இரண்டு முறை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 15 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகளில் முதுகலை பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது.  இதுவரை வரப்பட்டுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் கல்லூரிகளில் கூடுதல் சேர்க்கை தொடர்பாக முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒரிரு நாட்களில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்து விடுவோம். தமிழக முதல்வர் அரசு விழாவில் பேசியது போல, கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக உத்தரவில் கையெழுத்து போடுவதற்கு ஆளுநர் காலதாமதம் செய்கிறார். நான் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட நிலையில், இதுவரை ஆளுநர் எங்களை அழைக்கவில்லை. காத்துக்கொண்டு இருக்கிறோம்.  ஆளுநர் அழைக்கும் நேரத்தில், கலைஞர் பல்கலைக்கழகத்தின் அவசியம் குறித்து, ஆளுநரிடம் எடுத்துக் கூறி, அனுமதி பெற முயற்சிப்போம். விரைவில் அழைக்க வேண்டும் இல்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். முதல்வர் பேசியதற்கான அர்த்தத்தை ஆளுநர் புரிந்து கொண்டு விரைவில் அனுமதி வழங்குவார் அல்லது பேச அழைப்பார் என எதிர்பார்கிறோம். கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் அனுமதி தர மறுப்பது, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தடை விதிக்கும் செயல் என்பதை நாடு அறியும். தமிழகத்தில், உயர்கல்விக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பது தான் ஆளுநர் வந்ததில் இருந்து எடுக்கும் முயற்சி. அந்த தடையை எல்லாம் உடைத்து உயர்கல்வியை உச்சத்திற்கு கொண்டு செல்வோம். திராவிட கொள்கைக்கு உரியவர்கள் பெரியார், அண்ணாதுரை வழியில் உள்ள இயக்கம் நமது தி.மு.க., என்றைக்கும் கொள்கையில், திராவிடப் பற்றில், தமிழ்ப்பற்றில் பின்வாங்காத இயக்கமாக உள்ளதால் தான். பாசிச வெறிபிடித்த பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழகத்தையும், தமிழக முதல்வரையும் வஞ்சிக்கிறது. இதனால், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ.க முட்டுக்கட்டை போடுகிறது. இதையெல்லாம் உடைத்தெறிந்து, தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லும்" இவ்வாறு அவர் கூறினார்.
Next Story