சிவகங்கை ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் பதிலளிக்க உத்தரவு
X
ஆய்வகம் கட்டித் தராதது குறித்து அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சிவகங்கையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு: சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், ஒவ்வோா் ஆண்டும் மாணவா்களின் சோ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு போதுமான அறிவியல் ஆய்வுக் கூடம் இல்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்தப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம் கட்டித் தர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அறிவியல் சாா்ந்த பாடங்களை மாணவா்கள் கற்கும் போது அதற்குத் தேவையான ஆய்வக வசதிகளை செய்து தராதது ஏன்?. வழக்கு தொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தனர்
Next Story