பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம்

பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம்
X
உயிர் காக்கும் மருத்துவர்கள் பணியில் கவனமுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனைக்கு வருகை புரியும் கர்ப்பிணித் தாய்மார்கள் பற்றிய (PICMI) பதிவுகளை சுணக்கமின்றி உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும்
பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் இன்று (25.06.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பணிகள் தொடர்பாக மாதந்தோறும் திறனாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இக்கூட்டத்தில் கர்ப்ப கால மரணங்கள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொண்டு கரப்பக்கால மரணங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் நிகழாதவாறு கர்ப்பிணிப் பெண்களை பேணி காத்து அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழிகாட்டுதல்களை மருத்துவர்கள் வழங்கிட வேண்டும் . உயிர் காக்கும் மருத்துவர்கள் பணியில் கவனமுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனைக்கு வருகை புரியும் கர்ப்பிணித் தாய்மார்கள் பற்றிய (PICMI) பதிவுகளை சுணக்கமின்றி உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும் எனவும், கர்ப்பிணித் தாய்மார்கள் பதிவு தாமாகவே பதிந்து கொள்ளும் முறை (Self Registration) அதிகப்படுத்தி பிரசவத்திற்கு முன்பு செய்யப்படும் (UWIN) பதிவுகள் தொய்வின்றி செய்யப்பட வேண்டும் எனவும், அவசர உதவி அறை (Control Room) சுகாதார அலுவலர் அலுவலகத்தில் இயங்கி வருவதால் இதனுடன் தொடர்பில் இருக்கவும், பிறப்பு பதிவுகள் நகராட்சிக்கு அனுப்பப்படும் ஒருமுறை இருமுறை சரிபார்த்த பின்னரே குழந்தை பிறப்பு பதிவுகளை அனுப்ப வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வளமிகு வட்டாரம் (Focus Block) திட்டத்தின் கீழ் தேவையான மருத்துவ உபகரணங்களை விரைந்து வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும். வளர் இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு செய்யப்படும் இரத்தசோகை தொடர்பான பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். குறைபாடு உள்ள மாணவ, மாணவிகள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தகுதியுள்ள தம்பதிகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆலோசனை வழங்கி குடும்ப கட்டுப்பாடு மேற்கொள்வோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பாலின விகிதம் குறைவாக உள்ளதால் பெண் சிசு பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதை திடீர் ஆய்வுகள் மூலம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய பிரசவங்களை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட வேண்டும். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை முழுவதுமாக பயனாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். (RBSK Team) அங்கன்வாடி மையங்களில் பரிசோதனை செய்து குழந்தைகளுக்கு ஏற்படும் நோயினை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதனை களைவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி சிறார் நலவாழ்வு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சை வழங்கவும் மேற்சிகிச்சை தேவைப்படும் ஒரே மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். திருமண மண்டபங்களில் கை கழுவும் இடத்தில் சோப்பு வைக்கப்பட வேண்டும். தோல் நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுடன் கலந்து பேசி தொடர் சிகிச்சை வழங்க வேண்டும். காசநோயாளிகளை கண்டுபிடிக்கும் சளி பரிசோதனை அளவை அதிகரிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, துணை இயக்குநர் (காசநோய்) மரு.நெடுஞ்செழியன், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story