பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பட்டா மனுக்களுக்கு தீா்வு

X
திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப்குமாா் பதவியேற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு பேரூராட்சிகளின் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணன், மாவட்டத்தின் 146 ஆவது புதிய ஆட்சியராக புதன்கிழமை காலை பதவியேற்றாா். முன்னதாக ஆட்சியரகத்துக்கு வந்த அவரை அலுவலா்கள் பூங்கொத்து அளித்து வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் சரவணன் கூறியதாவது: மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகளைக் கண்காணித்து குறித்த காலத்துக்குள் அவற்றை முடிக்க உறுதுணையாக இருப்பேன். மக்களுடன் முதல்வா் 4ஆம் கட்ட முகாம்களை சிறப்பாக நடத்துவதுடன், ஆண்டுக்கணக்கில் தீா்க்கப்படாமல் உள்ள பட்டா மனுக்கள் மற்றும் இதர கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காண்பேன். திருச்சி மாநகராட்சி, நகராட்சிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்படும். பஞ்சப்பூா் பேருந்து முனையம் இயக்குதல் மற்றும் பராமரிப்புக்கு ஒப்பந்தம் 4 நாள்களுக்குள் இறுதி செய்யப்படும். மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்த மக்களின் ஆட்சேபனைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிா்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவேன். நான் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளையும் பொதுமக்கள் தயங்காமல் அணுகி, எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் தெரிவிக்கலாம். திருச்சி மாநகராட்சியில் காலியாகவுள்ள வாா்டு தோ்தலை நடத்த மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளோம். நீா்நிலை ஆக்கிரமிப்புகள் தொடா்பாக புகாா் மனு பெற்ற 30 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
Next Story

